ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹொரணவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
பாராமன்றத்தில் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிட்ட பின்னர், ஹம்பாந்தோட்டை தொடர்பான எல்லா உடன்பாடுகளின் பிரதிகளையும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு தனியார் காணிகள் சுவீகரிக்கப்படாது எனவும் அரச காணிகள் மாத்திரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே அரச காணிகளை தொழில்களைத் தொடங்குவதற்காக வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவிலும் தாய்லாந்திலும் உள்ளது போல, கைத்தொழில் வலயங்களுக்கான காணிகளை இனம் காண்பதற்கும், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அதிகாரசபை ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.