ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் – அக்டோபர் 1ம் தேதி விசாரணை தொடக்கம்

161 0

முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், மியான்மர் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் போராடும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் மியான்மர் ராணுவத்துக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், மியான்மர் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது. தேர்தலின் போது சட்டவிரோதமாக வாக்கி டாக்கி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு, தேசத்துரோக வழக்கு,  ரகசிய சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றதாக வழக்கு என பல வழக்குகள்  ஆங் சான் சூகி மீது தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று ஆங்சான் சூகியின் வழக்கறிஞர் கின் மாங் ஸா கூறியுள்ளார்.
முக்கியமான 4 ஊழல் வழக்குகளிலும் ஆங் சான் சூகி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தலா 15 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.