யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வாள்வெட்டுச்சம்பத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.
நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தைப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான 37 வயதுடைய இராசரத்தினம் ஈஸ்வரன், 30 வயதுடைய இராசரத்தினம் இதயன், 23 வயதுடைய இராசரத்தினம் இதயவீரன் ஆகிய மூவரும் அவர்களின் அக்காவின் மகன்களான செல்வநாயகம் கஜீவன், செல்வநாயகம் சஜீவன் ஆகிய இருவரும் ; ஈடுபட்டதாக இளவாலைப் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சாந்தைப்பகுயைச் சேர்ந்த முத்தன் செல்வச்சந்திரன் எனும் 45 வயதுடையவர் உடமையில் வாளுடன் நேற்று கைதானார்.
குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய பொன்ராசா ஜெனீஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.