வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொல்வதற்கு பெருமைக்குரிய விடயம், ஆனால் உண்மையில் அது ஒரு நரக வாழ்க்கை, நடமாடும் நரக வாழ்க்கைதான் வெளிநாட்டு பயணம். என வெளிநாட்டு பயணத்தினால் பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வந்துள்ள பெண்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வாழ்க்கையை தொலைத்திட்ட பெண்கள், வெளிநாட்டு பயணத்தினால் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள பெண்கள், தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களுள் மீரிகமவை சேர்ந்த உதயணிகுமாரி என்ற பெண் கருத்து தெரிவிக்கும் போது..
எனது கணவர் வெளிநாட்டு பணியகம் ஒன்றினூடாகவே வெளிநாடு சென்றார். ஆரம்பத்தில் எமக்கு நம்பிக்கையளித்தார்கள் சிறிது காலம் இலகுவான வேலை பயப்பட வேண்டாம் என ஆறுதல் அளித்தார்கள்.
ஆனால் எனது கணவருக்கு மத்தியக்கிழக்கு நாடுகளில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.உண்பதற்கு, குடிப்பதற்கு கூட எதுவும் தரவில்லை என பலமுறை தொலைபேசியில் அழுதிருக்கிறார். எனது 8 வயது குழந்தையை வைத்துக்கொண்டு தனியொரு நபராக போராடினேன் எமக்கு பொலிஸார் கூட கருணை காட்டவில்லை என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பிரிதொரு பெண் கருத்து தெரிவிக்கும் போது.நான் பல வருடங்கள் மத்தியகிழக்கு நாட்டில் துன்ப நிலையை அனுபவித்து வந்தேன். முறையான சம்பளம் வழங்கப்படவில்லை.
தினமும் அடி ,சித்திரவதை என என்னை தொடர்ந்தும் துன்புறுத்தி வந்தார்கள். பிள்ளைகளை பார்க்க செல்ல விடுமாறு பலமுறை கதறினேன் எனக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை
1 வருடம் சம்பளமில்லாத பணியாளாக கடமையாற்றினேன். வெளிநாடுகளில் என்னைப்போல் கதறி தவித்து கொண்டிருக்கும் பெண்களை மீட்டு கொண்டு வர அரசு கருணைக்காட்ட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.இதுபோன்று வெளிநாடுகளில் துன்ப நிலையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் பல பெண்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.