மதுரையில் நூலக கட்டிடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் கூடுதலாக ஆறு தளங்களை உள்ளடக்கி சுமார் 2 லட்சத்து 250 சதுர அடி பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் மற்றும் மதுரையில் நூலகம் அமைக்கும் பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சட்டசபையில் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளை, மக்களும், வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அதற்கான மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டது. உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், முகப்பில் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம் பெற்றிருந்தன.
மேலும், மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் எனவும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ரூ.99 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்த நூலக கட்டிடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் கூடுதலாக ஆறு தளங்களை உள்ளடக்கி சுமார் 2 லட்சத்து 250 சதுர அடி பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த நூலகத்தில் அரிய நூல்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மின் நூலகம், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு என பல்வேறு வகையான பிரிவுகளும், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் எளிதாக நூலகப் பிரிவுகளுக்கு பயணிக்கும் வகையில் மின் தூக்கி, இயங்கும் படிக்கட்டுகள், சாய்வு தளங்கள் ஆகியவையும் கலைஞர் நூலகத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், கருணாநிதிக்கு நினைவிடம் மற்றும் மதுரையில் நூலக பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், பணிகளை தீவிரப்படுத்துவது, கலைஞர் நூலக வரைப்படங்களை தேர்வு செய்வது, பணிகளை துரிதப்படுத்தி செயல்படுத்துவது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.