சென்னையில் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு ஆகிய 3 இடங்களில் நாய் கருத்தடை மையம் செயல்படுகிறது.
சென்னையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை மாநகராட்சி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருந்தன.
தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் வரை உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நகர பகுதிகளை விட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அதிக தெரு நாய்கள் உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் அதன் இன விருத்தியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் பிடித்து செல்லப்படுகிறதோ அங்கேயே கொண்டு விட வேண்டும் என்ற விதியும் உள்ளது.
தற்போது மாதத்திற்கு 1000 முதல் 1100 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்படுகிறது. சென்னையில் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு ஆகிய 3 இடங்களில் நாய் கருத்தடை மையம் செயல்படுகிறது.
இந்த மையங்களை விரிவாக்கம் செய்து கூடுதலாக நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஆண்டிற்கு 25 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும் என்று சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
ஒரு நாய் ஆண்டிற்கு 2 முறை இனபெருக்கம் செய்வதன் மூலம் 10 குட்டிகளை ஈன்றெடுக்கும். இதனால் தெரு நாய்களின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துவிடும். அதனை கட்டுப்படுத்தும் வகையில் இனக்கட்டுப்பாட்டு மையம் விரிவுபடுத்தப்படுகிறது.
தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு 85 தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இதனை அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும் தண்டையார் பேட்டையிலும் ஒரு கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. மையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டால் கருத்தடை இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல சாலையில் சுற்றித்திரியும் மாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. மாதத்திற்கு 124 உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று 3 நாட்கள் வரை மாநகராட்சி சார்பில் பாதுகாக்கப்படும். அதற்குள் அதன் உரிமையாளர் வரவில்லை என்றால் அந்த மாடுகள் புளூகிராசில் ஒப்படைக்கப்படும்.
மேலும் சாலையில் மீண்டும் மாடுகளை விடமாட்டோம் என்று உள்ளூர் போலீஸ் நிலையத்திடம் இருந்து உறுதிமொழியும் சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பெற்று வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.