பின்தங்கிய பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனம்

270 0

1461311531full-rathakrishnan-lபின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும், பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (05) கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற பின்தங்கிய பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பொழுதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும் பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

பகல் போசனத்திற்காக 7,911 பாடசாலைகளில் இருந்து 1.2 மில்லியன் மாணவர்களும் இதற்காக 4875 மில்லியன் ரூபாவும் பசும்பால் வழங்குவதற்காக 432 பாடசாலைகளை சேர்ந்த 115,000 மாணவர்களுக்காக 310 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் அதேவேளை மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது.

மாணவர்கள் கல்வியை சிறந்த முறையில் தொடர வேண்டுமானால் அவர்களின் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த வேலைத்திட்டத்தின் பயனாக 1.3 மில்லியன் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

இந்த திட்டத்தினை தொடர்ந்து இதற்கு உள்வாங்கப்படாத பாடசாலைகளையும் மாணவர்களையும் இணைத்துக் கொள்ளும் இரண்டாம் கட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.