தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி சித்திரவதைக்கு உற்படுதியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகவே அதற்கமைய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் எனவும், எவரும் இந்த விடயத்தில் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சர்வதேச தரப்பு எமக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எம்மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இந்த சூழலில் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுவது மோசாமான நிலை எனவும் அவர் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு குறித்து சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சுயாதீன அமைப்புகள், சர்வதேச தரப்பு என பலரும் தமது எதிர்ப்பினை முன்வைத்து வருகின்ற நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேசரிக்கு தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.