நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் சிறந்த திருப்புமுனையாக அமையும் விதத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி, கல்ஒலுவ, தொடங்வல பிரதேசத்தில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை இன்று காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வெளிநாட்டு கொள்கை மற்றும் நல்லாட்சி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகம் திருப்தி அடைந்திருப்பதாக கூறினார்.
இதனால் இலங்கை இழந்திருந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையை கால தாமதமின்றி மீளப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது நாட்டின் இறையாண்மைக்கும் காணி உரிமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையிலேயே ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும்.
நாடுகள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் அல்லது சர்வதேச அமைப்புக்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் போது மிகவும் திறந்த முறையிலேயே செய்யப்படும் என்று கூறிய ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகள் சம்பந்தமாக சிலர் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக கூறிய ஜனாதிபதி நாட்டின் ஒரு அங்குலத்தின் உரிமை கூட எந்தவொரு நாட்டிற்கும் வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று கூறினார்.
கடந்த அரசாங்கம் நாட்டின் மீது மிகப்பெரிய கடன்சுமையை ஏற்படுத்தியிருந்தது. இந்த கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்ட வேண்டும். ஆனால் குறைகளை மட்டுமே அடையாளம் காண சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.