தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 142 வாகனங்களும் , அவற்றில் பயணித்த 263 நபர்களும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாகாண எல்லைகளில் காணப்படுகின்ற 13 வீதித்தடைகளில் நேற்று வியாழக்கிழமை 106 பொலிஸார் மற்றும் 78 இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 548 வாகனங்களும் , அவற்றில் பயணித்த 917 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதேபோன்று மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 602 வாகனங்களும், அவற்றில் பயணித்த 1,093 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதன் போது அனுமதியின்றி பயணிக்க முற்பட்ட 142 வாகனங்களும் , அவற்றில் பயணித்த 263 நபர்களும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேல் மாகாணத்தில் வியாழனன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்கு 285 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களால் 5,698 வாகனங்களும் 9,335 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.