அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து தமிழ் அரசியல் கைதிகளும் முழந்தாழிடப்பட்டதோடு இருவருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்ந்த சம்பவங்களை விசாரணைகளின்போது தயக்கமன்றி சட்சியங்களாக வழங்குமாறும் அவர்களிடத்தில் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியின் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி காண்டீபனும் நேற்று முற்பகலளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திப்பதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரில் சென்றிருந்தனர்.
இதன்போது முதலில் சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் சிலமணிநேர காத்திருப்பின் பின்னர் சிறைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சந்தித்த கஜேந்திரகுமார் அவர்களிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) பதவி விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பிரசன்னமாகிய தருணத்தில் நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளிடத்திலிருந்து அச்சமான வெளிப்பாடுகளே அதிகளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தம்மை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ளனர். அத்துடன் தடுத்து வைக்கப்பட்டவர்களில் இருவரின் தண்டனைக்காலம் நிறைவுக்கு வருவதன் காரணமாக அவர்கள் தமது விடுதலை மேலும் தாமதமடையலாம் என்ற அச்சத்தினையும் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில்ரூபவ் சிறைச்சாலைக்கு நேரில் விஜயம் செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து பேசியிருந்தோம். சிறைச்சாலை நிருவாகம் அவ்விதமான சம்பவம் ஒன்றே நடக்கவில்லை என்றே நிராகரித்துள்ள நிலையில் அங்குள்ளவர்கள் அச்சமான மனநிலையில் உள்ளார்கள்.
எவ்வாறாயினும், குறித்த தினமன்று இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று பத்து தமிழ் அரசியல் கைதிகளையும் அழைத்து அவர்களை முழந்தாழிடச் செய்திருக்கின்றார். அத்துடன் அவர்களில் இருவரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார் என்பது உறுதியாகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நாம் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றோம். இராஜாங்க அமைச்சர் குறித்த விடயதானத்திலிருந்து மட்டும் பதவி விலகியிருப்பதுடன் இந்த விடயத்திற்கு தீர்வு ஏற்பட்டு விடாது.
ஆகவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் வழங்கவுள்ளோம். அவ்விதமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் குறித்த தினமன்று நடைபெற்ற விடயத்தினை வெளிப்படுத்துமாறு அவர்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனினும் அவர்கள் அவ்விதமான வெளிப்படுத்தல்களைச் செய்வதால் தமக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள், அல்லது நெருக்கடிகள் எழலாம் என்று கருதுகின்றனர். தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் நடைபெற்ற விடயம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது. ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியே இவ்விடயம் சம்பந்தமான கரிசனையை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, அரசியல் கைதிகள் அச்சமடையாது, தமக்கு நிகழ்ந்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளோம். அத்துடன் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எம்மாலான நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ச்சியாக எடுக்கவுள்ளோம் என்றார்.