நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை சுகாதார அமைப்பால் தாங்க முடியாது

228 0

தற்போதைய நாளாந்த கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 2300 ஆக உள்ளது. இது சுகாதார அமைப்பால் தாங்க முடியாதது என சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார்.

நாடு சௌகரியமாக உணர்ந்தால் நாளாந்தம் அறிக்கையிடப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

“நாட்டினுள் பூச்சிய கொவிட் தொற்றுகள் பதிவாகும் ஒரு காலம் இருந்தது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் மட்டுமே நாளாந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். நாட்டில் 100 முதல் 200 தொற்றாளர்கள் மட்டுமே பதிவாகியிருந்த காலமும் இருந்தது. இயல்பு நிலையைத் எட்டுவதற்கு இந்தச் சூழ்நிலை களில் ஒன்றை நாம் அடைய வேண்டும்” என மருத்துவர் ஹேரத் மேலும் கூறினார்.

தடுப்பூசி போடுவதன் மூலமும் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும் திருப்திகரமான நிலையை அடைவதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.