தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்களின் இறுதிவணக்கம்.

274 0

15.09.2021

தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு
இறுதிவணக்கம்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த இராமசாமி என்னும் இயற்பெயர்கொண்ட  தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்கள் உடல்நலக்குறைவால் 08.09.2021 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி ஈழத்தமிழர்களாகிய எம்மைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்தவர். தமிழர் தேசம் விடுதலையடைய வேண்டும் என்கின்ற தீராத அவாவுடன் செயற்பட்டவர். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுடன் தமிழ்நாட்டில் மிக நெருக்கமாக ஒன்றித்திருந்து> விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சிக்குத் தன்னாலான உழைப்பினை வழங்கிப் போராட்டம் புத்தெழுச்சிபெறப் பாடுபட்டவர்.

பேரறிவுமிக்க தமிழாசானாக> தாய்மொழிப்பற்றும் தமிழ்மொழித் தேர்ச்சியும் கொண்ட இவர்> தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களையும் போராட்டத்தின் அவசியத்தையும் கவிவரிகளாக வெளிக்கொணர்ந்து மக்களுக்குப் போராட்ட உணர்வெழுச்சியினை ஊட்டியவர்.  அதன் தொடர்ச்சியாக 2009 இற்குப் பின்னரும் தமிழர் மீது தொடரும் அடக்குமுறைகள் சார்ந்தும் விடுதலைப் போராட்ட நியாயங்களையும் போராட்டத்தின் அர்ப்பணிப்பு மிக்க தியாகங்களையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைப்பதைத் தன்பணியாகக் கொண்டிருந்து இறுதிவரை செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளராவார்.

ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசபடைகளால் தமிழின அழிப்புச் செய்யப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல்கொடுத்தவர். தமிழ்மக்களுக்கான நிலையான தீர்வொன்று கிடைக்கவேண்டுமெனச் செயற்பட்டுகொண்டிருந்த நிலையில்  தனது 85 ஆவது அகவையில் உடல்நலக் குறைவால் சாவடைந்த புலமைப்பித்தன் ஐயா அவர்களின் இழப்பு> தாய்த்தமிழக மக்களைமட்டுமன்றி> ஈழத்தமிழ் மக்களையும் துயரடையச் செய்துள்ளது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்> உறவினர்> நண்பர்களின் பிரிவுத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்வதோடு> இவருக்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.