பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை

236 0

நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தினால் மாணவர்கள் நலனை கருத்திற்கொண்டு அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்கு 249,841 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அத்துடன், 5ஆம் தரப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு 243,704 பேரும் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 301,471 பேரும், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக 331,740 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் கல்வி அமைச்சின் செயலாளருடன் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது இந்தவிடயம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.