அரசாங்கம் நாட்டு மக்களை மாத்திரமல்லாது சீன அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ளதாகவும் அதேபோல் சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு பொய்களை கூறியது போல் அரசாங்கம் உலகத்திற்கும் பொய் கூறியுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தோட்டை மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஊடக சந்திப்புகளை நடத்தி காணிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை எனக் கூறினர். மறுபுறம் காணிகளை பெறப்போவதில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிக்கும் நிகழ்வு மற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அப்படியானால், ஏன் அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது. அரசாங்கம் தொண்டைக்கு தெரியாமல் மருந்தை குடிக்க பார்க்கின்றது.
எந்த பிரச்சினை வந்தாலும் துறைமுகம் சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கூறினார்.எனினும் துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடுவது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக இன்று காலையில் கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கை சட்டரீதியானதல்ல. நாட்டு மக்களை ஏமாற்றுவது போல் அரசாங்கம், சீனாவையும் ஏமாற்றியுள்ளது. அதே போல் முழு உலகத்திற்கும் அரசாங்கம் பொய் கூறியுள்ளது.
துறைமுகம் சம்பந்தமான உடன்படிக்கை சட்டத்தில் நிறைவேற்றப்படாத ஒன்று. இதில் சட்டரீதியான தன்மையில்லை. இதுமுற்றிலும் பொய்யானது.
அரசாங்கம் தனது இயலாமையை தற்காலிகமாக மறைத்துக்கொள்ள அரச வளங்களை தனியார்மயப்படுத்த முயற்சித்து வருகிறது.
எதிர்ப்பு தெரிவிக்க வந்தால், இராணுவத்தையும் கடற்படையினரையும் பயன்படுத்தி தாக்குவோம் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என ஹம்பாந்தோட்டையை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார்.
மக்களின் குரலை அடக்குவதுதான் நல்லாட்சி கொள்கை என்றால், இதுதான் நல்லாட்சியை எம்மால் கேட்க நேரிட்டுள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.