இலங்கை அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

215 0

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்திக்கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதுகளுக்கு நேர்ந்துள்ள நிலையை பார்கையில் இலங்கை அரச மனித உரிமைகள் பேரவையை எந்தளவு தூரம் மதிக்கின்றது என்பது வேலைப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவரை அழைத்து அவர்களை முழங்காலில் நிறுத்தி, தன்னுடைய பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களின் நெற்றியில் வைத்து அவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளார்.

தங்களின் உயிரை இந்த நிமிடமே பறிக்க தயார் எனவும் கூறியதாகவும் மிக மோசமாக அவர்களை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவரது அணைத்து பதவிகளையும் முதல் கட்டமாக பறிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபர்களை, அவர்களின் நலன்களை பேணிப்பாதுகாக்க நியமிக்கப்பட்ட அமைச்சரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதுவும் இன்று தமிழ் மக்களின் மனித உரிமைகளை பேசி தமிழ் மக்களை பாதுகாக்கப்போவதாக ஜெனிவாவில் காட்டப்படுகின்ற விசேட அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் விசேட வாய்மூல அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டு இலங்கை குறித்து இந்த கட்டமைப்பு பார்த்துக்கொண்டுள்ள நிலையில், இவ்வாறன சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதே பிழை என சர்வதேசம் கூறுகின்ற நிலையில், பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், குறைந்தபட்சம் இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு இடம்பெற்றுள்ள அநியாயமே இதுவாகும்.

இது சாதாரன விடயமல்ல. இலங்கை அரச மனித உரிமைகள் பேரவையை எந்தளவு தூரம் மதிக்கின்றது என்பதே இதன் வெளிப்பாடாகும். தாம் கட்டுப்பட மாட்டம் என்பதை உலகத்திற்கு காட்டுவதாகவே அரசாங்கம் செயற்பட்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான நிலைமைகள் நடக்கின்றது என்பது கூட தெரியாது அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் உறவுகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் உள்ளனர். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோனை முன்வைக்கின்றோம்.