இந்திய வீரர்கள் முககவசம் அணியவில்லை- முன்னாள் வீரர் திலிப் தோஷி தகவல்

306 0

இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மான்செஸ்டரில் கடந்த 10-ந் தேதி தொடங்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் களம் இறங்க மறுத்ததால் அந்த போட்டி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் 4-வது டெஸ்ட் போட்டியின் போது கொரோனா பாதிப்பை சந்தித்ததாலும், அடுத்து உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மரும் கொரோனா தொற்றுக்கு ஆளானதாலும் கலக்கம் அடைந்த இந்திய அணியினர் களம் இறங்க மறுத்ததால் விறுவிறுப்பான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வராமல் போனது.
4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லண்டனில் உள்ள ஓட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியினர், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் கலந்து கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்து கொண்டதன் விளைவாக தான் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரவிசாஸ்திரி
இந்த நிலையில் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் தோஷி கூறுகையில், ‘ஓட்டல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் நான் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். அதில் நிறைய பிரபலங்கள் மற்றும் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் உள்பட யாரும் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்திய வீரர்கள் 10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள்.
இருப்பினும் வீரர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கொஞ்சம் அதிகமாக கூடுவார்கள் என்பதால், இந்திய அணியினர் முககவசம் அணிந்து இருக்கலாம். நான் அணியில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் சொந்த பாதுகாப்பு கருதி முககவசம் அணிந்து இருப்பேன்.
5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக வர்ணணையாளரும், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரருமான மைக்கேல் ஹோல்டிங்கிடம் நான் பேசினேன். அப்போது அவர், ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு போதிய காலஅவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஏற்கனவே 4-வது டெஸ்டுடன் தொடரை முடித்து கொள்ள வலியுறுத்தி இருந்தனர் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்’ என்றார்.