பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை போலீசார் தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு மணிலாவில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கிடாபாவன் எனும் இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட கிள்ர்ச்சியாள்ர்கள் உள்ளிட்ட 1511 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெளியிலிருந்து 12 பேர் ஆயுதங்களுடன் சிறையில் அதிரடியாக புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த களேபரத்தை பயன்படுத்தி 158 கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துச் சென்றனர். மேலும் இக்கலவரத்தில் ஒரு போலீஸ், அப்பகுதியைச் சேர்ந்த நபர் மற்றும் 5 கைதிகள் பலியாயினர்.
பின்னர் தீவிர தேடுதல் நடத்திய போலீசார் 34 பேரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும் மற்ற கைதிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கொரில்லா தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர்கள் சிறைத்தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சிறையில் 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்றாம் முறையாக தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.