போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

414 0

ramathasஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது  குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதன் காரணமாக,  இலங்கை அரசின் மீதான போர்க்குற்றங்கள் பற்றி இனி உள்நாட்டு நீதிமன்றமே விசாரணை நடத்தும். இதில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது.  அதுமட்டுமின்றி, தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் அனைவரும் தப்பி விடுவார்கள். இதைத் தடுக்க வேண்டிய பெரும் கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது.

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணை குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை நடக்கிறது. பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

ஆனால், தனது தீர்மானத்தை தானே மதிக்காத இலங்கையிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை. எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் கூட்டத்தில் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது