சிகிரியா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற மண் அகழ்வு தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹாரே, விவசாய சேவைகள் பிரதி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
பழைமை வாய்ந்த எஹெலகல வாவியின் புனரமைப்பு பணி என்ற போர்வையில் இந்த மண்அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெகோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பாரியளவிலான குழிகள் தோண்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாள் சம்பளத்திற்காக பணியாற்றிய ஊழியர்கள் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
எஹெலகல வாவியின் அபிவிருத்தி பணிகளுக்காக விவசாய சேவைகள் திணைக்களத்தினால் 15 லட்சம் ரூபா குத்தகைகாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வாவியின் அபிவிருத்தி உடன்படிக்கை மீறப்பட்டு, குத்தகைகாரர்களினால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் வெளியாகியுள்ளது.
விசாரணைகள் நிறைவு பெறும் வரை குறித்த குத்தகைக்கான பணத்தை செலுத்த வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹாரே விவசாய சேவைகள் பிரதி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.