வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார்.
யாழ்ப்பாண கொன்சியூலர் பிரிவு இம்மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்த்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண கொன்சியூலர் அலுவலகத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கோகுல ரங்கன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
அலுவலக திறப்பு விழா நிகழ்விற்கு வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட இருப்பதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படவுள்ள கொன்சியூலர் பிரிவின் செயற்பாடுகளாக சர்வதேச சமூகத்திற்கு இடையில் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதிப்படுத்தல். வெளிநாடுகளில் தத்தளிக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருதல், இலங்கைக் குடியகல்வு ஊழியர்களின் வழங்கப்படாத சம்பளம், நஸ்ட ஈடு, சட்ட ரீதியான மற்றும் காப்புறுதி நஸ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக உதவி செய்தல், வெளிநாட்டில் இறக்கும் இலங்கையர்களின் இறந்த உடலை உள்நாட்டிற்கு இறுதிக் கிரிகைக்காக கொண்டுவருதல் அல்லது அந்நாட்டிலேயே இறுதிக்கிரிகைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுத்தல். அத்துடன் வெளிநாட்டுக் கடற்பரப்பில் கைதாகும் இலங்கை மீனவப் படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிப்பதற்கு இடையீடு செய்தல், விசேட பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கல் போன்றவற்றுடன் அவசர அனர்த்த சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும், நிவாரணங்களையும் வழங்குதல் அத்துடன் வெளிநாட்டில் கைதான இலங்கையர்களுக்காக சாதாரண சட்டரீதியான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கு இடையீடு செய்தல் போன்ற செயற்பாடுகளை கொன்சலேற்றிவ் பிரிவு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.