பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 18 வயதான யுவதியை 2 லட்சம் ரூபா வீதமான சரீர பிணையில் கீழ் விடுவிக்குமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நீதவானினால் யுவதியின் பெற்றோருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதியின் காதலன், தனது நண்பர்களுடன் கடந்த 26ஆம் திகதி பதுளை நோக்கி செல்லும் ரயில் ஹட்டன் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்திற்கு தனது காதலன் செல்வதனை குறித்த யுவதி விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றுப் பயணத்தை தவிர்க்கும் நோக்குடன் குறித்த யுவதி பதுளை ரயிலில் வெடி குண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதென பொலிஸார் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர்.
பதுளை நோக்கி செல்லும் ரயிலில் வெடி குண்டுள்ளதாக குறித்த யுவதி 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அறிவித்துள்ளார்.
தனக்கு அருகிலுள்ளவர்கள் உரையாடியமைக்கு அமையவே தான் அறிவிப்பதாகவும் அவர் பொலிஸாருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், ரயிலிலிருந்து எந்தவொரு வெடிப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பில் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த தொலைபேசி அழைப்பு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக குறித்த யுவதி கைது செய்யப்பட்டிருந்தார்.
கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இந்த ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவி பாரிய தவறொன்றை இழைத்துள்ளதாகவும், கல்வி கற்பதனால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிப்பதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.