அரசாங்கம் திட்டமிட்டு பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்து நாடகமாடுகின்றுது- முஜிபுர்

194 0

அரசாங்கம் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.

இவ்வாறானதொரு நாடகத்தை அரங்கேற்றி திட்டமிட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கச் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாம் இன்று நாட்டில் மிகவும் துரதிஷ்டவசமான இடத்திற்கு வந்துள்ளோம். ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி மிக்க சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகும்.

தற்போது நாட்டின் எதிர்காலம் குறித்தும் எதிர்கால சந்ததியினர் குறித்தும் அதிகளவில் சிந்திக்க வேண்டியுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கான ஒரு இருன்ட யுகம் பற்றிய முன்னறிவிப்பைத் காண்கிறோம். 1970 மற்றும் 1977 களின் வரிசை யுகத்திற்கு திரும்ப வேண்டியுள்ளது.

ஜனாதிபதி கூறினால்  நாங்கள் வைக்கோலைக் கூட சாப்பிடுவோம் என்று தான் அரசாங்கம் கூறுகிறது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது.

நாட்டை அறிவூட்ட வந்ததாகக் கூறிய வியத்மக அமைப்பினர் இன்று அறிவிலிகளாக மாறியுள்ளனர். நாட்டுக்கு ஒளியைக் கொடுக்க வந்தவர்கள் முழு நாட்டையும் இருளில் கொண்டு செல்லும் சகாப்தமாக மாறிவிட்டனர். சுபிட்சத்தைக் கொண்டுவர வந்த அரசாங்கம் இன்று இந்த நாட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.

இன்று இலங்கையில் எவரும் முதலீடு செய்யக் கூடிய நிலைமையில் இல்லை. அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்ன பொருளாதார வளர்ச்சி செய்யப்பட்டது? நாடு அழிவின் விளிம்பில் உள்ளது. அரசாங்கத்தின் தவறான முடிவுகளால், நாடு மீண்டும் பின்னோக்கி செல்லும் சகாப்தம் வந்துவிட்டது, மீண்டும் நாடு பின்னோக்கி செல்லும் நாடாக மாறியுள்ளது என்றார்.