ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?- தி.மு.க.வுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி

260 0

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார் படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?

ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதனிடையே, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.