முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரான ‘மெகா’ கொழுக்கட்டை படையல்

204 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகர் சன்னதியும் சிறப்பு வாய்ந்தது. அங்கு வீற்றிருக்கும் 8 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் அவரது அரண்மனையை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டியபோது, பூமியன் அடியில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் இந்த விநாயகர் சிலை எடுக்கப்பட்டது.

அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று, இந்த முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், காலையில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் 18 படி பச்சரிசி, வெல்லம், தேங்காய், கடலை, எள், நெய் ஆகியவை கலந்து பெரிய கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த மெகா கொழுக்கட்டையை 2 பேர் பேர் சுமந்து வந்து, பகல் 11.15 மணிக்கு மேல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை இருப்பதால் நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், திருக்கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.