நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அப்போது தான் அது சர்வதேச அரங்கத்தில் எடுபடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலவிதமான கேள்விகள் வதந்திகள் உலா வருகின்ற காரணத்தினால் இந்த ஊடக சந்திப்பை நடாத்த முடிவு செய்திருக்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட 46/1 என்கின்ற தீர்மானம் சம்பந்தமான ஒரு முன்னேற்ற அறிக்கை வாய்மொழி மூலமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது மட்டும் தான் இந்த அமர்வில் நடைபெறும். எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்படாது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே46/1 தீர்மானத்தினுடைய முழுமையான எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனுடன் இணைந்து இலங்கை மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்படும். இலங்கையிலே நடக்கின்ற சில விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் வழமையாகவும் தொடர்ச்சியாகவும் ஆவணங்களை அனுப்பி வருகின்றோம். தொடர்ச்சியான தொடர்பாடல் எங்களுக்கும் அந்த அலுவலகத்துக்கும் 2012 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது.