துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

226 0

யாழ். நகர் – துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாக கள ஆய்வை மேற்கொண்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ண னிடம் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், புனித பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப் பட்டு வரும் குளம் , ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டம்,யாழ்.மாநகர சபை புதிய கட்டிடம் என்பவற்றையும் நாமல் பார்வையிட்டார்.

நாமல் ராஜபக்ச அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்கா ணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்தது.

மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம்,பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பழை அருணோதயா பாடசாலைக் கட்டிடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டம் ஆகியன குறித்தும் அமைச்சர் நாமல் ஆராய்ந்தார்.

அவரது யாழ். வருகையின்போது யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், எம்.பி.சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.