தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2017-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.1.2017-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.இதில், மொத்தம் 15,85,603 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 15,04,233 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய 10,46,794 விண்ணப்பம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 2,33,561 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இடம் மாற்றம், இறப்பு, இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 3,84,369 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.92 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.99 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5040) உள்ளனர். கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து கூடுதலாக 10.22 லட்சம் பேர் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.