நாளை முதல் 19ம் தேதி வரை சென்னையில் புத்தக கண்காட்சி

304 0

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியதாவது: பபாசியின் சார்பில் இந்த ஆண்டு 40வது  புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 19ம் தேதி வரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில் 700 அரங்குகள் இடம் பெறுகின்றன. 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் அரங்குகளில் இடம் பெறும். அவற்றில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகங்களும் பங்கேற்கின்றன.
பணப் பிரச்னையை தவிர்க்கும் வகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்த வசதியாக சிட்டி யூனியன் வங்கி உதவியுடன் 50க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் மிஷின்கள் கண்காட்சியில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அரங்கில் ஏடிஎம் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. பபாசி நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் எம்ஜிஎம் டிஸ்ஸி வோர்ல்டு சென்று வருவதற்கான இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும், கண்காட்சியில் விலை கொடுத்து வாங்கப்படும் நுழைவுச் சீட்டுகள் மற்றும் விலையில்லா நுழைவுச் சீட்டுகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எம்ஜிஎம் டிஸ்ஸி வோர்ல்டு நுழைவுக் கட்டணத்தில் 250 சலுகை வழங்கப்படும்.

ஆப்ஸ் அறிமுகம்:  கண்காட்சிக்கு வருவோர் நுழைவுச்சீட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு வசதியாக புதிய ஆப்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த  ஆப்ஸ் மூலம் தங்கள் செல்போனில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு, அரங்குக்கு வரும்போது செல்போனை காட்டிவிட்டு செல்லலாம். கண்காட்சிக்கு வருவோர் 10 கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற வேண்டும்.50க்கும், 100க்கும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 50 சீசன் டிக்கெட் பெற்றால் ஒரு நபர் கண்காட்சி முடியும் நாள் வரை இலவசமாக வரலாம். 100 சீசன் டிக்கெட் பெற்றால் 4 பேர் குழுவாக வரலாம்.