தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்தது

311 0

201701050217359302_tamil-nadu-north-east-monsoon-rain-ended-meteorological_secvpfதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது. வட கிழக்கு பருவமழை தொடங்கினாலும் இந்த வருடம் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதுவும் பரவலாக மழை பெய்யவில்லை. கனமழையாகவும் பெய்யவில்லை. இதனால் வட கிழக்கு பருவமழை பொய்த்து போனது.

வங்க கடலில் உருவான வார்தா புயல் சென்னை துறைமுகத்தை கடந்த மாதம் டிசம்பர் 12-ந் தேதி கரையை கடந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அன்றைய தினம் சில இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு மழை அவ்வளவாக பெய்யவில்லை.

வட கிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் நடைபெறவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கணக்கிடப்படும். சில வருடங்களில் ஜனவரி 5-ந் தேதி வரை கூட நீடித்தது உண்டு.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்னிந்திய பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் வலு குறைந்த காற்று தொடர்ந்து வீசுகின்றன. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வட கிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. இந்த வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை அல்லது இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. அதாவது 44 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 17 சென்டி மீட்டர் மழை தான் பெய்துள்ளது.

அதேபோல வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் 78 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் நடந்து முடிந்த வடகிழக்கு பருவமழையின்போது 34 சென்டி மீட்டர் மழை தான் பெய்துள்ளது. அதாவது 57 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதற்கிடையே அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வுபகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக தமிழகத்தில் எந்த தாக்கமும் இருக்காது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.