புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.
புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.
பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிக்கும் போது தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் பிடித்த மீன்களை அபகரித்துக்கொண்டு, படகுகளை தாக்கி சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.
எனவே மீனவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை மீனவர்கள் அறிந்துகொள்ளவும் ‘அதிநவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியையும், நவீன தொழில்நுட்பத்தை கையாள்வது குறித்தும் விளக்க அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திறனாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை இலவசமாக நடத்த மத்திய மீன்வளத்துறை கடல்சார்-பொறியியல் பயிற்சி நிறுவனத்துக்கு (சிப்னெட்) மத்திய அரசு உத்தரவிட்டது. பயிற்சியில் இணைய 20 மீனவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். சென்னை ராயபுரம் எஸ்.என்.சாலையில் உள்ள ‘சிப்னெட்’ பயிற்சி நிறுவனத்தில் நேற்று முன்தினம் பயிற்சி தொடங்கியது.
முதல் நாள் பயிற்சி வகுப்பில் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான ஆவண காட்சிகள் காட்டப்பட்டன. நவீன விசைப்படகுகள் பயன்படுத்துவது, கடல்சார் பிரச்சினைகள், மீன்பிடித்தலின் போது ஏற்படும் எல்லை பிரச்சினைகள் மற்றும் விளைவுகள் குறித்து மீனவர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
2-ம் நாளான நேற்று விசைப்படகுகளின் இயக்கம், ஆழ்கடலில் விசைப்படகுகளை இயக்குவது?, விசைப்படகில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகள், நவீன தொலை தொடர்பு கருவிகளை கையாள்வது? குறித்து பயிற்சி தரப்பட்டது.
பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ‘சிப்னெட்’ பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஸ்கிப்பர்-2’ நவீன விசைப்படகுக்கு மீனவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். விசைப்படகில் உள்ள இழுவை விசை திறன் கருவிகள், மீன்பிடி வலை இழுவை எந்திரம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்து மீனவர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர். இக்கட்டான நேரத்தில் இழுவை எந்திரத்துக்கான மாற்று முறை செயல்பாடு குறித்தும் விளக்கம் தரப்பட்டது.
விசைப்படகு இயக்க தேவையான எந்திரங்கள் குறித்து மீனவர்களுக்கு அதிகாரிகள் எடுத்து கூறினர். விசைப்படகில் திசை காட்டும் கருவிகளை எப்படி பயன்படுத்துவது? ரேடார் கருவிகள் மூலம் எப்படி கடல் திசையை கணிப்பது? தொலைதொடர்பு கருவிகளின் இயக்கம் மற்றும் பயன்பாடு, இழுவலை தவிர்த்து ஆழ்கடலில் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் மீன்கள் பற்றி அறிய காந்த அதிர்வு கருவிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இலங்கை நாட்டு எல்லைக்குள் போகாமல் எச்சரிக்கை செய்யும் ‘எக்கோ’ சவுண்ட் ரக கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்தும் செயல்விளக்கம் காட்டப்பட்டது.
இதுகுறித்து ‘சிப்னெட்’ அதிகாரிகள் கூறியதாவது:-
மீனவர்களுக்கு காலையில் திறனாய்வு பயிற்சியும், பிற்பகலில் செயல்முறை பயிற்சியும் 13-ந் தேதி வரை அளிக்கப்படுகிறது. வரும் நாட்களில் மீனவர்கள் 3 பிரிவினராக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பிரிவினருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். இதர 2 பிரிவு மீனவர்களுக்கு கொச்சி, மும்பையில் உள்ள ‘சிப்னெட்’ நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் உரிய சான்றிதழ்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
ஆழ்கடலில் அதிகம் வாழும் ‘சூரை’ வகை மீன்களை பிடிக்க தெரியாத்தனமாக எல்லை தாண்ட வேண்டிய சூழ்நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. காந்த அதிர்வு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப உதவியின் மூலம் ஆழ்கடலில் எந்த பகுதியில் மீன்கள் அதிகம் உள்ளது? அது தமிழகத்துக்கான வரையறுக்கப்பட்ட எல்லையா? என்பது குறித்து சுலபத்தில் அறிந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.