கல்வி செயற்பாடுகளுக்குப் பாதிப்பு

247 0

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளால் மாணவர்களின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து கருத்துரைத்த அவர், அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்குவதில் காலங்கடத்தி வருகிறது. இதனால் மாணவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும். எனினும் அரசாங்கம் அதனை செய்யாது பிரச்சினையை நீடித்து வருகிறது. இதனாலேயே மாணவர்களுக்கு இணையவழி கற்றல் தடைப்பட்டுள்ளதாக நாம் பெற்றோருக்கு கூற விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை பத்திரமொன்றை வெளியிடுவதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பதை நாம் எவ்வாறு நம்புவது? அடுத்தக்கட்டமாக சுற்றுநிரூபம், வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது உள்ளிட்டப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அமைச்சரவைப் பத்திரத்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பாடு. இதுத் தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டுமென அமைச்சரவை உப குழுவுக்கும், கல்வி அமைச்சுக்கும் அறிவித்து ஒருவாரங்கள் ஆகின்றன. எனினும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதனாலேயே இப்பிரச்சினை நீடித்து வருகிறது. எங்களது கோரிக்கைகளை நாம் குறைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளோம் என்றார்.