சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி

277 0

201701050539568367_court-judge-question-sekar-reddy-case-bank-officer-whom_secvpfசேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்ததாக சேகர்ரெட்டி உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பின்னர், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ரூ.8 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருந்ததாக மற்றொரு வழக்கை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இந்த 3 பேரையும் நேற்று முன்தினம் சென்னை சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர், இவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தார்கள். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி பரபரப்பான உத்தரவு ஒன்றை நேற்று மாலை பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

சேகர்ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையில், கடந்த டிசம்பர் 9-ந் தேதி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ரூ.8 கோடிக்கு பறிமுதல் செய்துள்ளதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர்களிடம் இருந்து ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.1.75 கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மூன்றாவதாக ஒரு வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி தான் மத்திய அரசு அறிவித்தது. ஒரு மாதத்துக்குள் அதாவது டிசம்பர் 9-ந் தேதிக்குள், இவ்வளவு பெரிய தொகை இவர்களுக்கு எப்படி வந்தது?

மேலும், இந்த ஒரு மாத காலக்கட்டத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை தரும் ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வைத்திருந்தவர்கள், அந்த நோட்டுகளை தங்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து, வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது சேகர்ரெட்டிக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது?

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றால், அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை. மத்திய அரசு, ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காகவும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஊழியர்கள் இரவும், பகலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பணம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்த பணம் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்படவில்லை.

வங்கிகள் மூலமும் விநியோகம் செய்யப்படவில்லை. அப்படியானால் புதிய ரூபாய் நோட்டுகள் எங்கே போனது? இந்த பணத்தை பெறுவதற்காக வரிசையில் நின்ற 76 பேர் நாடு முழுவதும் இறந்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஒரு அதிர்ச்சிகரமான தீர்மானத்தை இயற்றியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் போனதற்கு ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்களை குறிப்பிட்டு தான் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு விநியோகம் செய்திருக்கும். இந்த எண் குறித்துள்ள ஆவணங்களை பெற்றால், யார் யாருக்கு? யார் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது? என்பதை எளிதாக கண்டறிந்து விட முடியும்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது என்றால், வங்கி மேல் மட்ட உயர் அதிகாரிகள் தொடர்பு இதில் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மேல் மட்ட உயர் அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லையே? வங்கியின் கீழ் மட்ட அதிகாரிகள் மட்டும் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார்கள். மேல் மட்ட அதிகாரிகளின் துணையின்றி, இந்த கீழ் மட்ட வங்கி அதிகாரிகளால் இந்த முறைகேட்டில் ஈடுபட முடியாது.

எனவே, அந்த மேல் மட்ட அதிகாரிகள் யார் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டியது இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் கடமையாகும்.

நாட்டில் நிலவும் வறட்சியால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனவேதனையில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலும், ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள பணத்தை பொறுத்தவரை, யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற உண்மை எல்லாம் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு மட்டுமே தெரியும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் கூறும் இந்த காரணம் ஏற்றுக் கொள்ளும் விதமாக உள்ளது. அதனால், சேகர்ரெட்டி உள்ளிட்ட 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகிறேன்.

அதாவது 4-ந் தேதி (நேற்று) மாலை 6.15 மணியில் இருந்து 6-ந் தேதி (நாளை) மாலை 6.15 மணி வரை இந்த 3 பேரையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம். இவ்வாறு நீதிபதி வெங்கடசாமி உத்தரவில் கூறியுள்ளார்.