சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர், வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து திருமண மண்டபங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஆட்களை திரட்டி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் (வியாழன், வெள்ளி) முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிக அளவில் மக்கள் பயணித்ததை காண முடிந்தது. இதன் காரணமாக சென்னையில் திருமண மண்டபங்கள் இருக்கும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
கொரோனா அச்சமின்றி திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பலர் திரண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் இருந்தனர். 90 சதவீதம் பேர் முககவசத்துக்கு விடை கொடுத்து கொரோனா பற்றிய எந்தவித பயமும் இன்றி காணப்பட்டனர்.
வடபழனி, கோயம்பேடு, போரூர், மதுரவாயல், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலேயே திருமண நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் வேன்களிலும் பலர் சென்றதை காண முடிந்தது.
சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பலர் வந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளன.
ஒரே விடுதியில் திருமண வீட்டார் மொத்தமாக அறைகளை பதிவு செய்து வைத்து இருந்தனர். இதன் காரணமாக லாட்ஜூகளில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பலர் திண்டாடியதையும் காண முடிந்தது.
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருமண மண்டபங்களிலும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மண்டபங்களில் மேற்கொண்டனர்.
ஒரு சில மண்டபங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.