சென்னையில் 12-ந் தேதி 1600 சிறப்பு முகாம்: ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பாடல் மூலம் பிரசாரம்

290 0

தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3,000 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சென்னையில் வருகிற 12-ந் தேதி தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் அன்றைய நாளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நகரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்காக சிறப்பு பிரசார பாடல் ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பாடல் மூலம் வீதி வீதியாக தடுப்பூசி போட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கோப்புப்படம்

குப்பை அள்ளக்கூடிய பேட்டரி வாகனங்களில் இந்த பிரசார தடுப்பூசி பாடல் ஒலிபரப்பப்படுகிறது. வீதி வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கும் வாகனம் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தெருக்களிலும் இந்த வாகனம் செல்லும் போது பாடல் ஒலி கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து கவனிக்கிறார்கள். மேலும் குப்பையை கொட்டும்போது தடுப்பூசி போடக்கூடிய தகவல்களையும் தெரிந்து கொள்கிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் 3 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3,000 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்த சிறப்பு முகாமை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.