பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதுடன் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதாலும், பெரும்பாலானோர் முக கவசம் அணியாததாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 5 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அமர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியூரில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்களில் தான் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசு பஸ்களைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பஸ்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் ஒருவருக்கொருவர் நெருக்கியபடி பயணிக்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் பயணம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசம் என்றதால் பஸ்களில் பெண்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. தற்போது மாணவ, மாணவிகளும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் பெரும்பாலான பஸ்கள் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்கின்றன. இருக்கைகள் நிரம்பி மாணவ, மாணவிகள் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர்.
நேற்று பள்ளி முடிந்தவுடன் தஞ்சை மேரீஸ்கார்னர், பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை. சிலர் மட்டுமே முக கவசம் அணிந்து இருந்தனர். முக கவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளி மறந்து மிக அருகிலேயே நெருங்கி நின்று கொண்டிருந்தனர். பஸ்கள் வந்தவுடன் ஓடிச்சென்று ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு பஸ்களில் ஏறினர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 9, 12-ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரமான நிலையில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்றதால் கடந்த காலத்தை விட பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.