உருளைக்கிழங்குடன் ஹெரோயின் கடத்திய விவகாரத்தில் வர்த்தகருக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுப்பு

259 0

நாட்டில் நிலவும் கொரோனா  நிலைமையானது, பாரிய போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பிணையளிப்பதற்கான விஷேட காரணியாக ஏற்றுக்கொள்ள முடியாது என  மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளுடன், உருளைக்கிழங்குகள் வடிவில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட ஹெரோயின் உருண்டைகளை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, வர்த்தகரான அப்துல் காதர் அபூபக்கர் என்பவருக்கு பிணை கோரி, அவரது மகன் இமாத் அபூபக்கர் தாக்கல் செய்த( CA/ PHC/APN CPA 42/2021 எனும் )  மேன் முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இதனை அறிவித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்த தீர்ப்பினை அறிவித்தனர்.

சந்தேக நபரின்  சுகயீன நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என  மனுதாரர் சார்பில் சட்டத்தரணி என்.பெரேராவுடன் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வாதங்களை முன் வைத்திருந்தார்.

இவ்வழக்கில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி  சத்துரங்க பண்டார பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையில் இந்த மேன் முறையீட்டு மனுவின் 14 பக்களைக் கொண்ட தீர்ப்பை நீதிபதி மேனகா விஜேசுந்தரவின் ஒப்புதலுடன் நீதிபதி நீல் இத்தகவலை  அறிவித்தார்.