இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

419 0

downloadஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த போராளிகளின் விபரங்கள் தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக முன்னர் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.

இதையடுத்து, அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்ட போதும், நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், சரணடைந்தவர்களின் பட்டியலுக்குப் பதிலாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டோரின் பட்டியல் இராணுவத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் வேறு பட்டியல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என இராணுவத் தரப்பு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன, சரணடைந்தவர்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் பற்றிய பட்டியலை இராணுவத் தலைமையகம், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.