கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன – வைத்தியசாலையின் பணிப்பாளர்

213 0

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்று சூழலை கருத்திற்கொண்டு , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர். குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசரமான இதய அறுவை சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய 6,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

வைத்தியசாலையின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, நிலவும் சூழ்நிலையில் இருதய அறுவை சிகிச்சை செய்வதில் கடுமையான தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வாரந்தம் சுமார் 25 இதய அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் தற்போது இந்நிலை மாறியுள்ளதுடன், இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு ஐந்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், இந்தாண்டு நோயாளி ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டால், நோயாளி 2023 க்கு பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.