கேரளாவுக்கு சென்று திரும்பியவரால் பழங்குடி கிராமத்தில் பரவிய கொரோனா

207 0

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநில எல்லைகளில் 13 சோதனைசாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை மாவட்டம் ஆலாந்துறை சாடிவயல் அருகே உள்ள வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்று வந்தார். அவருக்கு திடீரென காய்ச்சல் பாதிப்புடன் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 42 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கிராமத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கிராமம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம மக்களை அதிகாரிகள் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.