அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய 5 பூங்காக்கள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக தர கட்டுப்பாடு அமைப்பு மூலம் அதன் குழுவினர் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்பட தோட்டக்கலை பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பூங்காக்களில் புல்வெளிகள் பராமரிக்கப்படுவது, மலர் மற்றும் அலங்கார செடிகள் நடவு செய்து வளர்ப்பது, சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாடு, பதிவேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் அழகியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா மேலாண்மைக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கும், பல்வேறு வகையான ரோஜா ரகங்களின் தொகுப்பு மற்றும் வளர்ப்பிற்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவிற்கும் ஐ.எஸ்.ஓ. எனப்படும் உலக தர கட்டுப்பாட்டு கழக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கும், தரமான நடவு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப தளமாக விளங்குவதற்காக பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணைக்கும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் பங்கேற்றார்.