வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று பெரிய தேர்பவனி

223 0

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.

கீழை நாடுகளின்” லூர்து நகர்” என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29-ந் தேதி பக்தர்கள் இன்றி நடந்தது.

ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீருடன் பெரிய தேர் பவனியானது ஆலய வளாகத்திள்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடக்கிறது.

நாளை(8-ந்தேதி) அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.