தொடரூந்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக காவற்துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதி இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை இரண்டு லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் குறித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த அஞ்சல் தொடரூந்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு யுவதி ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த தொலைபேசி அழைப்பை அடுத்து பதுளைக்கான தொடரூந்தின் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு காவற்துறை சிறப்பு அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவினரால்; சுமார் 2 மணி நேரம் தொடரூந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
எனினும் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் மீட்கப்படவில்லை.
இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட யுவதியை விசாரணை செய்தபோது தமது நண்பரான இளைஞர் மற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக குறித்த தொடரூந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவே தாம் அவ்வாறு செய்ததாக யுவதி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய யுவதி இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.