சீனி கொரோனா கொத்தணி தோற்றம் பெறும் அபாயம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

204 0

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் ‘ சீனி கொவிட்-19  கொத்தணி தோற்றம் பெறும் என அபயராம விஹாரையின் விஹாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில வியாபாரிகள் குறுகிய நோக்கில் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்படுகிறர்கள். நாட்டு மக்கள் முன்பொரு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். இந்நிலை மீண்டும் தோற்றம் பெறுமா என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது மக்கள் பெரும் அசௌகரியங்களை  எதிர்கொள்கிறார்கள். பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாத நிலை காணப்படுகிறது. தற்போது சீனி விலையேற்றம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட சீனி லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படுகிறது.

சதொச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ கிராம் சீனி மாத்திரமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் தேவையும் மாறுப்பட்டதாக அமையும். சதொச விற்பனை நிலையத்துக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் ‘சீனி கொவிட் -19 கொத்தணி’ தோற்றம் பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.