நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
மக்களின் நலன்கருதியே அவசரகால விதிமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும் அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கத்தினால் பொருட்கள் மீதான அதிக விலையை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த அவசரகால ஒழுங்கு விதிகள் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
தற்போது பல முக்கிய பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவசரகால ஒழுங்கு விதிகள் இன்றி வேறு சட்டங்களின் ஊடாக விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.