பழனி கோவிலில் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் இலவச மொட்டை அடிக்கும் திட்டம் அமலுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனிமேல் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனையடுத்து இந்த நடைமுறை இன்று முதல் அனைத்து கோவில்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. தற்போது வார விடுமுறைக்கு பிறகு இன்று பழனி கோவில் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சரவண பொய்கை, கிரி வீதியில் குடமுழுக்கு நினைவு அரங்கம் அருகே, பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரெயில் நிலையம் அருகே முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன.
இங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இன்று முதல் அந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்த வருபவர்கள் அங்குள்ள கவுண்டரில் இலவச டோக்கனை பெற்றுக் கொண்டு முடி காணிக்கை செலுத்திக் கொள்ளலாம்.
இது தவிர கூட்ட நெரிசல் ஏற்படாமல் தனியாக முடி காணிக்கை செலுத்த இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் தெரிவிக்கையில், தமிழக அரசின் இந்த உத்தரவு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஸ் செலவுக்கு மட்டும் பணம் கொண்டு வந்தால் போதும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். அதிலும் அருகில் உள்ளவர்கள் நடந்தே வந்து முடி காணிக்கை செலுத்தி குளத்தில் குளித்து விட்டு முருகனை தரிசனம் செய்து இலவச அன்னதானம் சாப்பிட்டு மனநிறைவுடன் வீட்டுக்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.
கோபால கிருஷ்ணன் என்பவர் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் கடவுளை மட்டுமே நம்பி நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதுவரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
3 நாட்களுக்கு பிறகு இன்று கோவில் திறக்கப்பட்டதாலும் இன்று அமாவாசை தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.