இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை நேற்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியிடமிருந்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 2016ஆம் ஆண்டு மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் இந்த செயலணி நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் நடத்திய கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை செயலணி தயாரித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து செயலணியின் அறிக்கையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.