ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ம் திகதி இரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பெண்ணொருவரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதற்கமைய அந்த ரயிலில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்ட பின்னர், அதில் அவ்வாறு எதுவுமில்லை எனத் தெரியவந்தது. இந்தநிலையில், இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் கிரிந்திவெல்ல பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம் யுவதியை இன்று காலை கைதுசெய்தனர்.
இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வழக்கு அடுத்த மாதம் 17ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.