ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி: வைகோ வாழ்த்து

179 0

ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில்தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் அர்ப்பணிப்புப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர்களே.

வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்தான்.

ஆசிரியர் பணி என்பது வெறும் ஊழியத்திற்கான பணி மட்டும் அல்ல, ஒரு உயிரோட்டமான பணி; வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் கடமையும், பொறுப்புணர்வும் மிக்க பணி. எனவேதான் ஆசிரியர்களைப் போற்றும் நாளாக செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நல்லாசிரியராக விளங்கி, நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் பொறுப்பை வகித்த தத்துவ மேதை சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நன்னாளில் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.