இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கிலான வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2013ம் ஆண்டு 27ம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி 2015ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
இந்தநிலையில், இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்த பதிவுகளை மேற்கொள்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என இனங்காணப்பட்டுள்ளது.
இதனால் குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும் காலத்தை மேலும் 04 வருடங்களினால் அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.